கொக்கட்டிச்சோலை_தான்தோன்றீச்சரம் ஒரு வரலாற்றியல் பார்வை.
பாகம் - 1
குணரெத்தினம் - உமாறமணனின் வரிகளில்
போவோமா ஊர்கோலம் பாகம் - 10
நீண்ட காலமாக ஒரு வரலாற்றைத் தேடும் பயணம்
மட்டக்களப்பு என்றாலே அதன் வாவி, வயல், மீன்பிடி, கூத்து, கோயில்கள் என்று ஒரு தனித்துவமான பண்பாட்டு உலகம் நம் கண்முன்னால் வருகிறது.
அந்த உலகத்திற்குள் சென்றால், பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையையும், வழிபாட்டையும், வாழ்க்கை முறையையும் தன்னுடன் சுமந்து நிற்கும் ஒரு முக்கியமான திருத்தலம் அதுதான் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம்.
இது ஒரு சிவன் கோயில் என்று மட்டும் சொல்லிவிட்டு கடந்து செல்லக்கூடிய இடம் அல்ல. இந்த ஆலயத்தைச் சுற்றி அரசர்கள் இருக்கிறார்கள்.
அரசிகள் இருக்கிறார்கள்.
குடிகள் இருக்கிறார்கள்.
காடுகளை அழித்து குடியேறிய மக்களின் கதைகள் இருக்கின்றன.
வாய்மொழியாக தலைமுறைகளைக் கடந்து வந்த சம்பவங்கள் இருக்கின்றன.
சோழர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
கலிங்கத் தொடர்புகள் பற்றிய மரபுகள் இருக்கின்றன. கண்டியரசனின் நிருவாகத்தின் கீழ் இந்தக்கோயில்கள் பேணப்பட்ட மரபு இருக்கிறது.
வன்னிமைகளின் அரசாட்சி நிர்வாக முறைமைகளால் பேணப்பட்ட தலத்தின் சிறப்புகள் இருக்கிறது.
அதுமட்டுமல்ல... ஒரு மரத்திலிருந்து தொடங்கும் ஒரு கதை இருக்கிறது. ஒரு வேடன் இருக்கிறார். அந்த மரத்திலிருந்து வெளிப்பட்டதாகக் கூறப்படும் இரத்தம் போன்ற திரவம் இருக்கிறது.
அதன் பின்னர் அங்கு கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அந்த இடத்திற்குச் செல்லும் ஒரு அரசி இருக்கிறார். அதன்பிறகு உருவாகிறது ஒரு ஆலயம்.
இந்தக் கதைதான் இன்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் தோற்றக் கதையாக பல தலைமுறைகளாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால்
இங்கேதான் நாம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்க வேண்டும்.
இந்தக் கதை முழுவதும் வரலாறா?
அல்லது இதற்குள் வரலாறும், வாய்மொழி மரபும், ஐதீகமும் கலந்து இருக்கிறதா?
இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் கொக்கட்டிச்சோலை ஆலயத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது.
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் வயது குறித்து இன்று பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகின்றன.
சில இடங்களில் இதன் வரலாறு மிகவும் தொன்மையான காலத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.
சில குறிப்புகள் இதனை சோழர் காலத்துடன் தொடர்புபடுத்துகின்றன.
சில உள்ளூர் வரலாற்று குறிப்புகள் 11ஆம் நூற்றாண்டைச் சுட்டுகின்றன.
மற்ற சில ஆய்வுக் குறிப்புகள் ஆலயத்தின் கட்டிடக்கலைத் தன்மைகளை நடுக்காலத்துடன் தொடர்புபடுத்துகின்றன.
இலங்கை தேசிய கல்வி நிறுவனம் வெளியிட்ட சைவநெறி வளத்திலும் ஆலயத்தின் கட்டுமான ஆண்டு தெளிவாகத் தெரியவில்லை என்றும், குறைந்தது 800 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், “இந்த ஆலயம் இவ்வளவு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது” என்று ஒரு குறிப்பை மட்டும் வைத்து முடிவு செய்துவிட முடியாது.
ஏனென்றால் ஒரு ஆலயத்தின் வரலாறு என்பது அந்தக் கட்டிடம் தோன்றிய நாளிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை.
ஒரு இடம் முதலில் புனித இடமாக இருந்திருக்கலாம்.
அதன்பிறகு அங்கு சிறிய வழிபாட்டு மையம் உருவாகியிருக்கலாம்.
பின்னர் அரச ஆதரவு கிடைத்திருக்கலாம்.
அதன்பிறகு கல் கட்டிடங்கள் எழுந்திருக்கலாம்.
வேறு காலங்களில் கோபுரம், மண்டபம், சந்நிதிகள், தேர்கள் என பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
அதனால் “ஆலயத்தின் வயது” என்பதையும் “இன்றுள்ள கட்டிடத்தின் வயது” என்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது.
அப்படியானால் இந்த ஆலயம் எப்படி உருவானது?
இங்கேதான் உலகநாச்சி என்ற பெயர் நமக்கு முன்னால் வருகிறது.
மட்டக்களப்பு பிராந்தியத்தின் பழைய வரலாற்று மரபுகளில் உலகநாச்சி முக்கியமான பெண் ஆட்சியாளராகக் குறிப்பிடப்படுகிறார்.
கொக்கட்டிச்சோலை ஆலய மரபுப்படி, அவர் ஆட்சி செய்த காலத்தில்தான் இந்தப் பகுதியில் ஆலயத்தின் தொடக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
கொக்கட்டி மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த இடம் “கொக்கட்டிச்சோலை” என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு மரபு கூறுகிறது.
அந்தக் காட்டுப் பகுதியில் தேன் எடுப்பதற்காகச் சென்ற ஒரு வேடர், ஒரு கொக்கட்டி மரத்தை வெட்ட முயன்றபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மரத்திலிருந்து இரத்தம் போன்ற திரவம் வெளியேறியதாக மரபு சொல்கிறது. அச்சமடைந்த அவர் அந்தச் செய்தியை அரசியிடம் தெரிவித்தார்.
உலகநாச்சி அங்கு சென்று பார்த்த போது அங்கு மண்ணுக்குள் புதைந்திருந்த ஒரு சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த லிங்கம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல.
தானாகத் தோன்றிய சிவலிங்கம்.
இதனால்தான் பின்னாளில் இந்தத் தலம் தான்தோன்றீச்சரம் என்றும், இறைவன் தான்தோன்றீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஆலயத்தின் மிக முக்கியமான ஐதீக மரபு.
ஆனால் இதை வரலாற்று உண்மை என்று நாம் உடனடியாகக் கூற முடியாது. அதே நேரத்தில், பல தலைமுறைகளாக இந்தக் கதை தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வந்திருப்பதால், அது மட்டக்களப்பு தமிழக மக்களின் வரலாற்று நினைவின் ஒரு பகுதியாக மாறியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
இதுதான் இந்த ஆலய வரலாற்றை சுவாரஸ்யமாக்குகிறது. ஒரு இடத்தின் வரலாறு சில நேரங்களில் கல் கல்வெட்டுகளில் மட்டும் இருக்காது.
அது மக்களின் நினைவிலும் இருக்கும்.
அவர்களின் கதைகளிலும் இருக்கும்.
அவர்களின் திருவிழாக்களிலும் இருக்கும்.
அவர்களின் குடும்ப மரபுகளிலும் இருக்கும்.
அவர்களின் கோயில் வழக்கங்களிலும் இருக்கும்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் வரலாறும் அப்படித்தான். ஆனால் அந்த நினைவுகளுக்குள் உண்மையான வரலாற்றுத் தடயங்கள் எங்கே இருக்கின்றன?
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் தோற்றத்தைப் பற்றி ஆய்வு செய்யும்போது, மீண்டும் மீண்டும் என் முன்னால் வந்து நிற்கும் பெயர் உலகநாச்சி.
ஆலய மரபில் அவர் ஒரு அரசியாக வருகிறார். மட்டக்களப்பு பூர்வீக வரலாற்று மரபுகளிலும் அவர் ஒரு முக்கியமான பெண் ஆட்சியாளராகக் குறிப்பிடப்படுகிறார்.
அவரைச் சுற்றி கலிங்கம், மண்முனை, குணசிங்கன், மேகவர்ணன், உலகநாதன் போன்ற பல பெயர்கள் இணைக்கப்படுகின்றன. ஆனால் இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது.
உலகநாச்சியைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் பின்னாளில் தொகுக்கப்பட்ட உள்ளூர் வரலாற்று நூல்கள் மற்றும் வாய்மொழி மரபுகளிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. அதனால் முதலில் நான் அவரைப் பற்றிக் கூறப்படும் காலக்கணிப்பை ஆராய வேண்டியிருந்தது.
நான் பார்த்த மட்டக்களப்பு வரலாற்று மரபுகளில், உலகநாச்சியின் இலங்கை வரவு கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கலிங்க அரசன் குகசேனனின் மகளான உலகநாச்சியும் அவரது சகோதரர் உலகநாதனும் இலங்கைக்கு வந்ததாகவும், அப்போது அனுராதபுரத்தை ஆட்சி செய்த மேகவர்ணனைச் சந்தித்ததாகவும் பதிவு செய்கிறது. பின்னர் மேகவர்ணன் அவர்களை மட்டக்களப்பை ஆட்சி செய்ததாகக் கூறப்படும் குணசிங்கனிடம் அனுப்பியதாகவும் அந்த கதை கூறுகிறது.
இங்கே எனக்கு மிகவும் சுவாரசியமாகத் தோன்றும் ஒரு விஷயம் இருக்கிறது.
உலகநாச்சியின் வருகை பற்றிய இந்த மரபு தனியாக உருவாக்கப்பட்ட ஒரு ஆலயக் கதை அல்ல. அது மட்டக்களப்பு பிராந்தியத்தின் பரந்த பூர்வீக வரலாற்று மரபோடும் இணைக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை மற்றும் ஆரையம்பதி ஆகிய பகுதிகளின் தோற்றத்துடனும், அங்குள்ள முக்கிய ஆலயங்களின் தோற்றத்துடனும் உலகநாச்சியின் வரவு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
இதனால் உலகநாச்சி என்ற பாத்திரம் வெறுமனே கொக்கட்டிச்சோலை ஆலயத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரமாக இருக்க முடியாது என்ற ஒரு ஆய்வுக் கேள்வி எழுகிறது. ஆனால் அதே நேரத்தில், இதனால் அவர் பற்றிய ஒவ்வொரு தகவலும் வரலாற்று உண்மை என்று முடிவு செய்ய முடியாது.
உலகநாச்சியின் தந்தையான குகசேனன் .
மட்டக்களப்பு வரலாற்று மரபுகளில் கலிங்க நாட்டின் அரசனாகக் கூறப்படுகிறார்.
இங்கே இன்னொரு முக்கியமான வரலாற்று ஒப்பீடு தேவைப்படுகிறது.
இலங்கையின் பௌத்த வரலாற்று மரபில், அனுராதபுர மன்னன் மேகவர்ணன் காலத்தில் கலிங்கத்திலிருந்து புத்தரின் புனித தந்த தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சம்பவம் குறிப்பிடப்படுகிறது.
மட்டக்களப்பு மரபில், அதே காலப்பகுதியுடன் உலகநாச்சியின் இலங்கை வரவும் இணைக்கப்படுகிறது.
இந்த ஒற்றுமை என்னை மிகவும் கவனமாக இருக்கச் செய்கிறது. ஏனெனில் இரண்டு வேறுபட்ட வரலாற்று மரபுகளும் ஒரே பரந்த காலப்பின்னணியைச் சுட்டுகின்றன.
ஆனால் இங்கு நான் ஒரு முடிவை உடனடியாகச் சொல்ல விரும்பவில்லை.
“இரண்டு மரபுகளும் ஒரே நிகழ்வைச் சொல்கின்றன” என்று கூறுவதற்கு இன்னும் அதிகமான ஒப்பீட்டு ஆய்வு தேவை. ஆனால் குறைந்தபட்சம், உலகநாச்சியின் கதை முற்றிலும் காலமற்ற ஒரு புராணக் கதையாக இல்லாமல், இலங்கையின் 4ஆம் நூற்றாண்டு அரசியல் மற்றும் கலிங்கத் தொடர்புகளுடன் இணைக்கப்பட்ட ஒரு வரலாற்று நினைவாக உருவாகியிருப்பதை அவனிக்க முடிகிறது.
மட்டக்களப்பு மான்மிய மரபில் வரும் கதைப்படி, உலகநாச்சி இலங்கைக்கு வந்த பின்னர் மேகவர்ணனைச் சந்தித்து தனது வரலாற்றுப் பின்னணியை விளக்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் மேகவர்ணன் மட்டக்களப்பை ஆட்சி செய்த குணசிங்கனுக்கு ஒரு திருமுகம் அனுப்பி, காடுகள் நிறைந்த குடியிருப்பற்ற பகுதியை உலகநாச்சிக்கு வழங்குமறு கேட்டதாக அந்த மரபு கூறுகிறது.
குணசிங்கன் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அம்பிலாந்துறைக்கு அப்பால் இருந்த காடுகள் நிறைந்த மண்முனைப் பகுதியை உலகநாச்சிக்கு வழங்கியதாகவும், பின்னர் அங்கு குடியேற்றத்தை ஏற்படுத்தி மாளிகை அமைத்ததாகவும் அந்தப் பதிவு தொடர்கிறது. இது மிகவும் முக்கியமானது.
ஏனெனில் இங்கு உலகநாச்சி ஒரு ஆலயத்தை மட்டும் அமைக்கும் அரசியாக இல்லை.
அவர் ஒரு நிலப்பரப்பைப் பெற்று, குடியேற்றத்தை உருவாக்கி, ஒரு அரசியல் மையத்தை அமைக்கும் ஆட்சியாளராக காட்டப்படுகிறார். இதிலிருந்து ஒரு முக்கியமான ஆய்வுக் கேள்வி உருவாகிறது. மண்முனை முதலில் ஒரு அரசியல் நிலப்பரப்பாக உருவானதா? அல்லது ஏற்கனவே இருந்த குடியிருப்பை உலகநாச்சி மறுசீரமைத்தாரா?
இதற்கான நேரடி தொல்லியல் ஆதாரம் கிடைக்காத வரை இவை கானல் நீர்போன்ற கதைகளாகும்.. ஆனால் வரலாறு மட்டக்களப்பு மரபு உலகநாச்சியை மண்முனையின் அரசியல் உருவாக்கத்துடன் இணைக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
உலகநாச்சியைப் பற்றிய சில பழைய பதிவுகளில், அவர் தன்னுடன் வந்த மக்களைக் கூட்டிவந்து மண்முனைப் பகுதியில் குடியேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சில மரபுகள் அவர்கள் குகக் குடும்பங்கள் என்றும், சில பதிவுகள் பல்வேறு தொழில்சார் சமூகங்களும் குடியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன.
இதனை நான் அப்படியே வரலாற்று உண்மை என்று ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் இத்தகவல் ஒரு முக்கியமான சமூக வரலாற்றுக் கேள்வியை எழுப்புகிறது.
அது யாதெனில் மண்முனை வெறும் அரசியல் மையமாக மட்டுமல்லாமல், திட்டமிட்ட குடியேற்றப் பகுதியாகவும் வளர்ந்ததா? மேலும் அந்தக் குடியேற்றத்திற்கும் பின்னாளில் கொக்கட்டிச்சோலை ஆலயத்தில் உருவான சேவை அமைப்புகளுக்கும் தொடர்பு இருந்ததா? இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது.
ஏனெனில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் வரலாற்றை கோயில் கட்டப்பட்ட வரலாறாக மட்டும் பார்த்தால், இந்தப் பகுதியின் சமூக வரலாற்றின் மிகப் பெரிய பகுதியை நாம் இழந்துவிடுவோம். உலகநாச்சியைப் பற்றிய ஆய்வில் எனக்கு கிடைத்த மற்றொரு முக்கியமான தகவல் என்னவென்றால், அவரது பெயர் கோவில்குளம் சிவாலயத்துடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. மண்முனை இராச்சியத்தில் உலகநாச்சி காலத்தில் இரண்டு முக்கிய சிவ வழிபாட்டு மையங்கள் இருந்ததாக ஒரு உள்ளூர் வரலாற்று ஆய்வு குறிப்பிடுகிறது:
01. கோவில்குளம் சிவாலயம்
02. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம்.
இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகிறது.
உலகநாச்சி முதலில் எந்த ஆலயத்தை அமைத்தார்?
இந்தக் கேள்விக்கு இதுவரை எந்த ஆய்வும் உறுதியான பதிலை வழங்கவில்லை. உலகநாச்சி தன்னுடன் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சிறிய படிகலிங்கம் கோவில்குளத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மரபும் உள்ளது. கோவில்குளம் ஆலயம் உலகநாச்சியின் தனிப்பட்.ட சிவ வழிபாடு செய்யும் ஆலையமாக இருந்திருக்கலாம் அதே நேரத்தில், இதனை உறுதி செய்ய விரிவான தொல்லியல் ஆய்வு தேவை. ஒரே நேரத்தில் இரண்டு சிவன் ஆலயங்களை அமைக்க வேண்டிய தேவை உலகநாச்சிக்கு ஏன் வந்தது?
தொடரும் ... வரலாற்றியல் பயணத்துடன் இணையுங்கள் #Follw செய்திடுங்கள்
