செவ்வாய், 3 நவம்பர், 2026

மாரியம்மன் காவியம் - மாரியம்மன் காவியம் பாடல் வரிகள்


மாரியம்மன் காவியம் - முழுவதும்

1.

அமிர்தபரி பூரணி நளினவிழி காரணி

அன்னபரி பூரணி சொர்ணமருள் பாகரி

திமிர்ததிமி திமிதியென நடனமிடு மகமாரி

தேவர்தொழு தேவிதன் தாளிணை வழுத்தக்

குமிர்தநல் வாயுமும் மதமுமிரு புயமும்

குடவயிறு துதல்விழியு முடையமார் பழகும்

திமிர்தமா மும்மதத் தைந்துகர முடையதொகு

தொந்திவயி றன்சரண மென்றுநற் றுணையே.

2.

துணையான கன்னனூர் மகமாரி யம்மைதாள்

தொழுதவர்க்கருள்கொடுத் தினிதுகந் தருள்வா

இணையான தெய்வங்கள் புவிமீதி லுண்டோ

உள்கிருபை தந்துநீ யெங்கள்துயர் தீர்ப்பாய்

கணையாளி கையில் தரித்தவன் தங்கையே

காவலா யிருமென்று காத்தானையின்றாய்

அணையாக வந்துன் அபயமே தருவாய்

ஆதியே சோதியே மகமாரி யம்மனே.


3.

மகமாரி யென்றுன்னை நினைப்பவர் தமக்கு

வாதமொடு பித்தஞ் சிலேற்பனங் கண்நோய்

பகைதோஷ மானதொரு நோய்கிரக தீவினைகள்

பாடுபட் டோடுமுன் நாமங்கள் சொன்னால்

அகமகிழ்ந் தஞ்சலென் றுன்கிருபை தருவாய்

அனலெனுங் கனல்தணித் தாளநினை யம்மா

சகலகலை வல்லியே கன்னனூர் வந்த

சக்தியே சித்தியே கமலா சனத்தியே.


4.

கமலமுக மழுகொழுகு தெரிவையுமை யவளுநீ

கலை பல தெரிந்தருளு  மரகர சிவாயம் நீ

அமலமர மேசுபரி விமலகிரு பாகரி

அரலோக பரலோக ஆனந்த ரூபிநீ

கனகமக மேருதனை வில்லாய் வளைத்தநீ

காமனொடு தக்கன் சிரந்தனை ஒடித்தநீ

அனவரத முன்கிருபை தந்திரட் சிப்பாய்

அதிகவர முடையதொரு மகமாரி யம்மனே.


5.

அதிகவர முடையதொரு தவசது புரிந்தாய்

அத்தனார் கிருபைபெற் றகமிக மகிழ்ந்தாய்

மதிவதன முடையதொரு மங்கைநீ யருளென்ன

மாமறையு முத்துநீ தாவென் றுரைக்க

நதியருவு பிறைகுடு நாதனும தருளால்

நன்னிதலு மோரென்று சோதிக்க நல்கிச்

சதிரமுறு கனல்தணித் ததிகவர மேபெற்ற

சத்தியே கன்னனூர் மகமாரி யம்மனே.


6.

கன்னனூர் வந்தநீ கம்பையில் வளர்ந்தநீ

கரகம தெடுத்தநீ குளையது பிடித்தநீ

முன்னமே வந்தநீ முப்புர மெரித்தநீ

மூவர்தொழு மூர்த்திநீ மூவுலகை யாண்டநீ

பன்னுமறை வேதம்நீ புன்னைநிழல் வந்தநீ

பங்கயச் செல்விநீ பாராளந் தவளும்நீ

அன்னையே மின்னையே யெனையாள வந்த

ஆதியே சோதியே அகிலநா ரணியே.


7.

நாரணி நால்வருண சாதனைக் காலாய்

நவரத்ன நால்வேத நல்லிரத மீந்து

பூரணம தானபொற் கும்பமது வைத்து

பூவையர்கள் மலர்சொரிந் தேகவரி வீச

வாரணத் தேவர்வலு வீரர்புடை சூழ்

வாசுகி  தன்னைவட மாகவே பூட்டிக்

காரணம தானபொற் றேர்மீதி லேறிவரு

கன்னனூர் ராச்சிகா மாட்சியா னவளே.


8.

ஆதிநீ அபிராமி யாகவந் தாயே

ஐயனொடு பரிகலஞ் சூழவந் தாயே

பேச்சி பெருமா ளுடன்பிறந் தாயே

பேரான மீனாட்சி யாகவந் தாயே

காட்சிதந் தேசேரி காக்கவந் தாயே

கனல்தணித் தினிததிக வரமளித் தாயே

வாட்சி சடைச்சியென வந்தவளும் நீயே

வடிவான ஆயிரங் கண்ணியா னவளே.


9.

ஆயிரங் கண்ணிநீ அகிலமுழு தாளுநீ

அட்சரம தானநீ அக்கினி தணித்தநீ

வேயிரு புயத்திநீ வேதமுத லானநீ

வேதாந்த ரூபிநீ வேதனை தணித்தநீ

காயுகன லாச்சிநீ காமன் சிலைச்சிநீ

கச்சனி முலைச்சிநீ காரண நிறத்திநீ

தாயும்நீ தந்தைநீ தந்திமுக னைப்பெற்ற

தையலே மகமாரி யானமா தரியே


10.

மாதரி புரந்தரி வரந்தரு குமாரி

மாசது விலாதமதி போலழகினாளே

ஆதரியுன் ஆதரவிலா தொருவ ருண்டோ

ஆருதவி சேயதனை ஆளநினை யம்மா

பாதிரி தரித்தபர நாதருட னாடும்

பாதமல ரேதுணை பராபர பவானி

நாதரி நடம்புரி நலம்புரி வராகி

நாலோக பரலோக நாரியம் பிகையே.


11.

அம்மைநீ அமிர்தத்தி லன்றுதித் தாயே

அழகான வலரிமல ராகிவந் தாயே

செம்மைநீ தேசியின் கனியுகந் தாயே

செவ்வந்தி மலர்மீது சேர்ந்திருந் தாயே

எம்மையா ளரசன்மக ளாகவந் தாயே

எழிலான எக்கிஷந் தனில்வளர்ந் தாயே

உண்மையாய் அக்கினி தனிலுதித் தாயே

உலகுதனி லதிகதவ மானநா யகியே.


12.

உலகுதனில் மகமாரி யாயவ தரித்து

ஒதரிய முத்துவகை தானது வுகந்து

நலமான வீசருக் கேமுத் தெறிந்து

நாரியுமை யாய்வந்து நற்கிருபை செய்து

கலைசெறியு மாரியுரு வாகியே வந்து

காத்தானை நல்மகவ தாகவே யீன்றாய்

நலமான தொட்டிய னிடமாக வந்த

நாதனார் நாரணன் தங்கையா னவளே.


13.

நாதனூர் நான்முகன் கட்டளை யிருந்தாலுங்

நாடுமோ உனையன்றி நம்பின பேர்க்கு

வேதனைகள் முடுகுமோ நோய்பிணிகள் அணுகுமோ

வேறுமொரு துட்டப் பசாசுவினை வருகுமோ

பாதமே கெதியென்று நம்பின பேர்க்கொரு

பயமுண்டோ செத்தபிண மற்றுயிர் கொள்ளா

நீதியோ வுன்னை நினைப்பவர்க் கிடறுவர

தோ நீதியோ சோதியே காத்தவ ராயசனே-


14.

காத்துநீ சேரிகனல் மாற்றவந் தாயே

கட்டாரி சொட்டயம் கையம்பு சவளும்

மாத்திரைக் கோலுடன் சாற்றுபரி வட்டம்

மத்தள முடுக்கைதவில் மிக்கவிரு தூத

நாற்றிசைக ளெங்கணுங் கீர்த்தியிசை பாட

நான்மறைக ளோதவென் சாமரை யிரட்ட

போற்றிசெய் தேபுஸ்ப மாரிமழை பொழியவரு

பூலோக ராசனே யீசுபரி பாலனே.


15.

ஈசனுடன் நாலுமறை வேதநூல் வாழி

இந்துமதி யொத்தளாக வீசுபரி வாழி

வீசுபுக ழுறுராச சிங்கனும் வாழி

விளைசெந்நெல் மழைபெய்து நீடுழி வாழி

வாசமுள நாடுநக ரெங்கணும் வாழி

வரிசைபெறு சைவகுல மரபுமிக வாழி

ஆகதமிழ் குற்றம் பொறுத்துநிதம் வாழி

அமிர்தபரி பூரணி வாழவா ழியதே.


குணரெத்தினம் - உமாறமணன் 

கருத்துகள் இல்லை:

மாரியம்மன் காவியம் - மாரியம்மன் காவியம் பாடல் வரிகள்

மாரியம்மன் காவியம் - முழுவதும் 1. அமிர்தபரி பூரணி நளினவிழி காரணி அன்னபரி பூரணி சொர்ணமருள் பாகரி திமிர்ததிமி திமிதியென நடனமிடு மகமாரி தேவர்தொ...