Showing posts with label சரஸ்வதி பூஜை வஜனை பாடல்கள். Show all posts
Showing posts with label சரஸ்வதி பூஜை வஜனை பாடல்கள். Show all posts

Thursday, October 10, 2024

சரஸ்வதி பூஜை பஜனை பாடல்கள்


 சரஸ்வதி சிந்தனை...


புத்தகத் துள்ளுறை மாதே

பூவில் அமர்ந்துறை வாழ்வே

வித்தகப் பெண்பிள்ளை நங்காய்

வேதப் பொருளுக் கிறைவி

முத்தின் குடையுடை யாளே

மூவுலகுந் தொழு தேவி

செப்பு கவித்தன முலையாய்

செவ்வரி ஓடிய கண்ணாய்

முத்து நிறத்து வெண்பல்லாய்

முருகம் பூ மேனி நிறத்தாள்

தக்கோலந் தின்ற துவர்வாயாய்

சரஸ்வதி என்னுந் திருவே

எக்காலும் உன்னைத் தொழுவோம்

எழுத்தறி புத்தி பண்ணுவிப்பாய்

ஆக்காய் எம் பெருமாட்டி

அழகிய பூவணை மீதாய்

நோக்காய் என் மிடி தீர

நொடிக்கும் பிராமணத்தி நோக்காயே

சாலு நெல்லரிசி கொண்டு

சரஸ்வதி பூஜை பண்ணி

பாலோடு பழத்தை நிரப்பி

பராவித் தொழுவோம் நங்காய்

நங்காய் நங்காய் நமஸ்து

ஞானக் கொழுந்தே நமஸ்து

கல்விக் கரசே நமஸ்து

கணக்கறி தேவி நமஸ்து

சொல்லும் பொருளே நமஸ்து

சூச்சும ரூபி நமஸ்து.





👉 வெள்ளைத்தாமரை பூவிலிருப்பாள்....


வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்


உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள்

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத்துட் பொருளாவாள்


மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

கீதம் பாடும் குயிலின் குரலை

கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்


கோதகன்ற தொழிலுடைத்தாகிக்

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்

இன்பமே வடிவாகிட பெற்றாள்


வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்.


👉 சகலகலாவல்லி மாலை ...


வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்

தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்

துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்

காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 


அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்

குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 


தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்

தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று

காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 


பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்

நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்

தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்

கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 


பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்

எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்

விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி

கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்

கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்

தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்

காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 


சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல

நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்

செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 


சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை

நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை

கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்

பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்

விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்

கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 


👉 மாணிக்க வீணை ஏந்தும் சரஸ்வதி  பாடல்


மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா


மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்


நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்

பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்


வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்

அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ


வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி

காணும் பொருளில் தோன்றும் கலைமணி

வேண்டும் வரம் தரும் வேணி

நான்முகன் நாயகி மோகனரூபிணி

நான்மறை போற்றும் தேவி நீ

வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்

கான மனோகரி கல்யாணி


அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா



மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்🙏


மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல் முறைகள்.

அறிமுகம் மட்டக்களப்பு (Batticaloa) — இலங்கையின் கிழக்குக் கடற்கரை மண்டலத்தில் அமைந்த ஒரு முக்கிய பிராந்தியம். இது அதன் லாகூன் (ஆறு) (lagoon...