செட்டிபாளையம்_போவோமா ஊர்கோலம்...
குணரெத்தினம் -உமாறமணனின் வரிகளில்
ஒரு ஊரின் வரலாற்றை எழுதுவது என்றால் அந்த ஊர் எங்கே அமைந்திருக்கிறது என்பதை மட்டும் சொல்லிவிடுவது அல்ல.
அந்த ஊர் எப்போது உருவானது?
யார் அங்கு குடியேறினர்?
அந்த மக்கள் எந்தத் தொழிலைச் செய்தனர்?
எந்தக் குடிகளுடன் தொடர்புடையவர்கள்?
எந்த ஆலயங்களை நிறுவினர்?
அந்த ஆலயங்களின் பூசை உரிமை யாரிடம் இருந்தது?
திருவிழாவில் எந்த ஊருக்கு என்ன பங்கு இருந்தது?
அந்த மரபுகள் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்யப்பட்டனவா?
அல்லது தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவே கடத்தப்பட்டனவா?
இவற்றையெல்லாம் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் ஒரு ஊரின் உண்மையான நுண்வரலாற்றை அணுக முடியும்.
அந்த வகையில் செட்டிபாளையம் மிகவும் சுவாரசியமான ஆய்வுத் தளமாகிறது.
ஏனெனில் இந்தச் சிறிய கிராமத்தின் வரலாற்றுக்குள்
மட்டக்களப்பு மான்மியம்,
ஓலைச்சுவடிகள்,
கண்ணகை அம்மன் வழிபாடு,
ஊர்சுற்றுக் காவியம்,
வசந்தன் பாடல்கள்,
கட்டாடியார் பரம்பரை,
குடிமரபு,
ஆலய நிர்வாக உரிமைகள்,
வன்னிமை மரபு,
1897ஆம் ஆண்டு நிர்வாகக் கூட்டப் பதிவு,
மற்றும் இன்றுவரை தொடரும் சடங்கு
எனப் பல அடுக்குகள் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன.
எனது ஆய்வில் செட்டிபாளையத்தை நான் ஒரு சாதாரண கிராமமாக அல்லாமல், மட்டக்களப்பின் பண்பாட்டு நினைவகங்களில் ஒன்றாக அணுகுகிறேன்.
செட்டிபாளையம் — நிலமும் நீரும் சந்திக்கும் ஊர் படுவாங்கரையின் திறவுகோல் மட்டக்களப்பிலிருந்து தெற்கே, கல்முனை நோக்கிச் செல்லும் பிரதேசத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம், கிழக்கில் கடலையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியையும் வடக்கே குருக்கள்மடமும், தெற்கே மாங்காடும் இதன் எல்லைகளாகக் கொண்ட தனித்துவமான நிலவியல் அமைப்பைக் கொண்ட அழகிய கிராமம்
இங்கு நெய்தல் நிலமும் மருத நிலமும் ஒன்றோடு ஒன்று கலக்கும் காட்சியை காணலாம் என்கிறது மட்டக்களப்பு தமிழகம் மட்டக்களப்புத் தமிழகம்
இது வெறும் இயற்கைக் காட்சியின் வர்ணனை அல்ல. மட்டக்களப்பின் பாரம்பரிய சமூகத்தைப் புரிந்துகொள்ள நிலவியல் மிக முக்கியமானது.
ஒருபுறம் கடல் — மீன்பிடி — உப்பு — கடற்கரைப் போக்குவரத்து மறுபுறம்
வாவி — வயல் — நெல் — நீர்ப்பாசனம் — விவசாயம் இவ்விரு பொருளாதார உலகங்களுக்கிடையே அமைந்திருக்கும் ஊராக செட்டிபாளையத்தைப் பார்க்க முடிகிறது.
“செட்டிபாளையம்” என்ற பெயர்
செட்டிபாளையம் என்ற பெயருக்கான ஒரு முக்கியமான உள்ளூர் விளக்கம் “செட்டிமார் பாளையமிட்டு தங்கிய இடம்” என்பதாகும்.
மட்டக்களப்புத் தமிழகம் இதையே ஊரின் பெயருக்கான காரணவியல் விளக்கமாக வழங்குகிறது. அதே நூல் செட்டிபாளையத்தைப் பழமையும் கல்வியும் செல்வமும் கொண்ட கிராமமாக வர்ணிக்கிறது. இதனுடன் மட்டக்களப்பு மான்மியத்தில் காணப்படும் வணிகச் செட்டிகள் தொடர்பான செய்திகளும் இணைந்து பார்க்கப்பட வேண்டியவை.
மான்மியத்தில் வடநாட்டு அண்ணாமலைச் செட்டிகள் மட்டக்களப்பில் வர்த்தகச் சாலைகளும் கிட்டங்கிகளும் அமைத்து வணிகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதிலிருந்து “செட்டிபாளையம் கண்டிப்பாக அந்த வணிகச் செட்டிகளால் உருவாக்கப்பட்டது” என்று நேரடியாக முடிவு செய்ய முடியாது.அதற்கு தனிப்பட்ட ஆரம்பகால ஆவணம் தேவை.அவ்வாறான ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. (ஆவணங்கள் இருப்பின் comments பக்கத்தில் பதிவிடுங்கள்)
எனவே செட்டிமார் பாளையமிட்ட இடம் என்ற விளக்கம் தற்போது ஒரு வலுவான உள்ளூர் இடப்பெயர் மரபு என்ற நிலையிலேயே வைக்கப்பட வேண்டும்.
ஒரு ஆச்சரியமான உண்மை செட்டிபாளையம் ஒரு “ஆவணப் பாதுகாப்பு இடம்” செட்டிபாளையத்தின் வரலாற்றில் என்னை மிகவும் கவர்ந்த ஆதாரங்களில் ஒன்று இதுதான்.
1962ஆம் ஆண்டு F.X.C. நடராசா பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியம் நூலின் முன்னுரையில் அவர் தெளிவாக எழுதுகிறார்:
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயிலில் இருந்த ஏடுகளிலிருந்தும், செட்டிபாளையம் கணபதிப்பிள்ளைப் புலவரிடம் இருந்த முழுமையான ஓலைப்பிரதியிலிருந்தும் நூலை ஒப்புநோக்கி பதிப்பித்ததாக.அதாவது
செட்டிபாளையம் → கணபதிப்பிள்ளைப் புலவர் → ஓலைச்சுவடி → மட்டக்களப்பு மான்மியம் என்ற நேரடியான ஆவணத் தொடர்பு இங்கு கிடைக்கிறது.
இது சாதாரண தகவல் அல்ல.
ஒரு ஊரின் வரலாறு வேறு இடத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.ஆனால் அந்த வரலாற்று உரையின் முழுமையான ஓலைப்பிரதி அந்த ஊரைச் சேர்ந்த புலவரிடம் பாதுகாக்கப்பட்டிருந்தது என்பது செட்டிபாளையத்தின் அறிவுப் பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இங்குதான் எனக்கொரு சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு. மட்டக்களப்பு மான்மியப் பாடல்களை ஏன் செட்டிபாளையத்தை சேர்ந்த புலவர்கள் எழுதியிருக்கக்கூடாது.
மட்டக்களப்பு மான்மியம் மிக முக்கியமான உள்ளூர் வரலாற்று ஆதாரம்.ஆனால் அதை நவீன வரலாற்று ஆவணமாக அப்படியே பயன்படுத்த முடியாது. அதன் பதிப்பாசிரியர் F.X.C. நடராசா தாமே நூலின் வரலாறு தொடர்பாக பல முக்கிய எச்சரிக்கைகளை வழங்குகிறார்.
நூலை யார் முதலில் எழுதினர் என்பது தெளிவில்லை;
பல காலங்களில் பலர் சேர்த்திருக்கலாம்;
சில பகுதிகளில் வரலாறும் மரபுக் கதைகளும் கலந்துள்ளன;
அரசர்களின் காலவரிசையில் குழப்பங்கள் உள்ளன;
சில செய்திகள் வேறு ஆதாரங்களுடன் ஒப்பிடப்பட வேண்டும்
என்று அவரே குறிப்பிடுகிறார். மட்டக்களப்பின் ஆவணங்களை தேடித்தேடி அனைத்தையும் சேகரித்து கடைசியில் மட்டக்களப்பின் வரலாற்றை அப்பம் தட்டி குப்பை ஆக்கியவர் FXC. எனது பார்வையில் அவர் மட்டக்களப்பு தமிழகத்தின் உண்மையான வரலாற்று தரிசனத்தை மூடி மறைத்து விட்டார். அது பற்றி நிச்சயம் பிறகு எழுதுகிறேன்.
எனவே இந்த ஆய்வில் நான் ஒரு முறையைப் பின்பற்றுகிறேன் மான்மியத்தில் உள்ள செய்தி → தனியாகப் பதிவு அதற்கு வேறு ஆதாரம் உள்ளதா? → ஒப்பீடு வேறு ஆதாரம் இல்லையா? → மரபுச் செய்தி எனக் குறிப்பு
இந்த முறைதான் செட்டிபாளையத்தின் வரலாற்றை மிகைப்படுத்தாமல் எழுத உதவும்.
#செட்டிபாளையம் — புலவர்களின் ஊர்
மட்டக்களப்புத் தமிழகம் செட்டிபாளையத்தைப் பற்றி இன்னொரு முக்கியமான தகவலை வழங்குகிறது.
கணபதிப்பிள்ளைப் புலவர் மற்றும் சின்னவப் புலவர் போன்றோர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் என அது குறிப்பிடுகிறது.
இது ஒரு தனிப்பட்ட குடும்ப வரலாற்றாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல.அதுவே உண்மை.
மட்டக்களப்பில் வரலாறு பெரும்பாலும்
புலவர் → ஓலை → பாடல் → ஆலயச் சடங்கு → வாய்மொழி என்ற பாதையில் தலைமுறைகளைக் கடந்துள்ளது.எனவே செட்டிபாளையத்தின் அறிவுசார் வரலாறும் அதன் ஆலய மரபும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை.
#செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயம்
செட்டிபாளையத்தின் வரலாற்றைச் சொல்லும்போது மிக முக்கியமாக முன்வருவது ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு என்ற தொகுப்பு 226 பக்கங்களைக் கொண்டது. அது வெறும் ஆலய வரலாறு அல்ல.
அதில்:
கிரான்குளம் தொடர்பு
குருக்கள்மடம் தொடர்பு
மாங்காடு தொடர்பு
தேற்றாத்தீவு சடங்கு
களுதாவளை குளிர்த்தி
குடியிருப்புக் கிராமம்
கும்பத்து நெல்
எட்டாம் நாள் சடங்கு
சித்திரைச் சடங்கு
கார்த்திகை விளக்கீடு
தைக் குளிர்த்தி
கட்டாடியார் பரம்பரை
குளிர்த்திப் பாடல்
கண்ணகை அம்மன் காவியம்
கண்ணகை அம்மன் அகவல்
மழைக் காவியம்
வைரவர் காவியம்
நாகதம்பிரான் காவியம்
வசந்தன் கவிகள்
எனப் பல்வேறு ஆய்வுப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.இது செட்டிபாளையம் கண்ணகை ஆலயத்தை ஒரு வழிபாட்டுத் தலத்தைவிடப் பெரிய பண்பாட்டு ஆவணமாக பார்க்க வேண்டிய காரணத்தை வழங்குகிறது.
1985 மற்றும் 1994 — இரண்டு வெளியீடுகளா? இங்கு ஒரு சுவாரசியமான ஆய்வு சிக்கல் உள்ளது. சில பின்னைய நூல் அறிமுகங்கள் 1985ஆம் ஆண்டிலேயே “செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்” என்ற நூல் வெளியானதாகக் குறிப்பிடுகின்றன.
அதேவேளை நூல் தேட்டப் பதிவு 1994 மே மாதம் வெளியான 226 பக்கத் தொகுப்பை பதிவு செய்கிறது. எனவே தற்போதைய நிலையில் நான் இதை 1985ஆம் ஆண்டு ஒரு முந்தைய ஆலய வரலாற்று வெளியீடு இருந்திருக்கலாம்; 1994ஆம் ஆண்டு விரிவான தொகுப்பு வெளியானது என்று மட்டும் பதிவு செய்கிறேன்.
இரண்டு நூல்களின் முழுப் பிரதிகளும் கிடைத்தால் அவை இரண்டையும் ஒப்பிட்டு
என்ன புதிதாகச் சேர்க்கப்பட்டது?
எந்த மரபுகள் மாற்றப்பட்டன?
எந்த குடும்பப் பெயர்கள் இடம்பெற்றன?
எந்த சடங்கு உரிமைகள் பின்னர் பதிவு செய்யப்பட்டன?
என்பதை தனி ஆய்வாகச் செய்யலாம். என எண்ணியூள்ளேன் கண்ணகை தாயின் திருவருள் கைகூடட்டும்
மிக முக்கியமான கண்டுபிடிப்பு — ஏழு கண்ணகை விக்கிரகங்கள் மட்டக்களப்பு மான்மியம் ஒரு மிக முக்கியமான கதையை பதிவு செய்கிறது.
போர்த்துக்கேயர் காலத்தில் ஏற்பட்ட சமய–அரசியல் சூழலைத் தொடர்ந்து, ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்கள், ஏழு நாடார் குடும்பங்கள், ஏழு ஆலய ஊழியக் கோவியர் குடும்பங்கள் ஆகியவை தொடர்புடைய ஒரு குடியேற்ற மரபு கூறப்படுகிறது. ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்கள் ஏழு கிராமங்களில் வைக்கப்பட்டன; நாடார் பூசகர்களாகவும்,
கோவியர் ஆலய ஊழியர்களாகவும்
அமைக்கப்பட்டதாகக் கூறுகிறது.
இது மிகவும் முக்கியமான செய்தி.
ஏனெனில் இங்கு நாம் காண்பது ஒரு தனி ஆலயம் அல்ல.தெய்வம் + பூசகர் + ஆலய ஊழியர் + குடியேற்றம் + கிராமம்
என்ற ஒரு சமூக அமைப்பு.
ஆனால் அந்த “ஏழு கிராமங்கள்” அனைத்தையும் மான்மியம் அந்த இடத்தில் பெயரிட்டு வழங்கவில்லை.எனவே பின்னாளில் பரவிய ஏழு ஊர் பட்டியலை மான்மியத்தின் அசல் உரையில் இருப்பதாகச் சொல்லக்கூடாது.
செட்டிபாளையத்துடன் தொடர்புடைய ஏழு ஊர் மரபு பின்னாளைய உள்ளூர் பதிவுகள் செட்டிபாளையம் கண்ணகை ஆலயத்துடன்
கிரான்குளம்
குருக்கள்மடம்
மாங்காடு
தேற்றாத்தீவு
களுதாவளை
அம்பிளாந்துறை
பழுகாமம்
ஆகிய ஊர்களுக்கு கண்ணகை அம்மன் ஆலையத்தில் உரிமை இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.இது முக்கியமான மரபு மட்டுமன்றி வரலாற்று செய்தியும்கூட
ஆனால் இங்கு இன்னொரு மிக முக்கியமான விஷயம் உள்ளது.
2017ஆம் ஆண்டின் ஆலய வரலாற்றுப் பதிவில், அம்பிளாந்துறை மற்றும் பழுகாமம் பின்னர் நிர்வாகப் பங்காளித்துவத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
அதனால் பழைய நிலை ஏழு ஊர்களின் உரிமை/பங்கேற்பு மரபு பின்னைய நிலையில் அது ஆறு ஊர்களின் நிர்வாக அமைப்புஎன்ற மாற்றத்தைப் பார்க்க முடிகிறது.1897 — நமக்குக் கிடைக்கும் மிக முக்கியமான காலனித்துவக் காலத் தடயம்
எனது ஆய்வில் இதுவரை கிடைத்த தகவல்களில் மிகவும் முக்கியமான ஒன்று
1897 பங்குனி 7 என்ற தேதியுடன் தொடர்புடைய கண்ணகைத்தாயாரின் ஆலயக் கூட்டத்தில் வட்டை விதானை செட்டிப்போடி கணபதிப்பிள்ளை வன்னிமை மற்றும் வாலநாதக் குருக்கள்
சபாநாயகர்களாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் அம்பிளாந்துறையின் பிரதிநிதிகள் நிலமை சின்னத்தம்பிப்போடி வன்னிமையின் மகன் வீமாப்போடி உடையார் மற்றும் இ.வ.வி. வீரபத்திரப்போடியார் பங்கேற்றதாகவும்,
பழுகாமத்தின் சார்பில் கண்ணப்பர் தம்பிமுத்து பங்கேற்றதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இது வெறும் வாய்மொழிக் கதை அல்ல.
இது ஒரு தேதியிடப்பட்ட நிர்வாகப் பதிவை அடிப்படையாகக் கொண்ட செய்தி.
ஆகவே செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தில் அம்பிளாந்துறை மற்றும் பழுகாமம் ஆகியவை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் உண்மையான பங்கைக் கொண்டிருந்தன என்பதை ஆராய்வதற்கு இது மிகவும் வலுவான தடயமாகும்.
இதனால் ஒரு புதிய ஆய்வுக் கேள்வி உருவாகிறது இதுவரை நாம் “ஏழு ஊர்களின் உரிமை”என்று மட்டுமே கூறி வந்தோம்.ஆனால் 1897 பதிவை இணைத்துப் பார்க்கும்போது கேள்வி இன்னும் ஆழமாகிறது இந்த உரிமை வெறும் சமயப் பங்கேற்பா? அல்லது நிர்வாக உரிமையா?
1897 கூட்டத்தில் பிரதிநிதிகள், வன்னிமை, குருக்கள், கிராமப் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெறுவது பார்க்கும்போது, இது வெறும் பக்திப் பங்கேற்பை விட நிறுவன நிர்வாகத் தன்மை கொண்டிருந்திருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகின்றது.
ஆனால் இதை உறுதியாகச் சொல்ல 1897 கூட்டக் குறிப்பின் முழு பிரதியும் தேவை.
அதில் என்ன தீர்மானிக்கப்பட்டது?
நில உரிமையா? பூசை உரிமையா?
வருமானப் பங்கா?
.சடங்கு பொறுப்பா?நிர்வாகத் தேர்தலா?
இவை தெரிய வேண்டும்.
#கட்டாடியார் — செட்டிபாளையத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றுப் பதவி
செட்டிபாளையம் கண்ணகை ஆலயத்தில் கட்டாடியார் என்ற பதவி மிக முக்கியமானது.1994 ஆலய வரலாற்றுத் தொகுப்பிலேயே“செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மனும் கட்டாடியார் பரம்பரையும்”என்ற தனிப்பட்ட ஆய்வுப் பகுதி இடம்பெற்றுள்ளது.மேலும் உள்ளூர் வரலாற்றுப் பதிவு கண்ணப்பக் கட்டாடியார் பற்றிய செய்தியை வழங்குகிறது.
அவர் செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயப் பூசகராக இருந்ததாகவும், மழை வேண்டிப் பாடியதாகக் கூறப்படும் அதேவேளை மழைக் காவியத்தில் அவரது பெயரும் இடம்பெற்ள்ளது
மிக முக்கியமாக, அந்தப் பதிவு ஒரு நீதிமன்ற ஆவணம் கண்ணப்பக் கட்டாடியார் ஆலயப் பூசகராக இருந்ததையும் கூறுகிறது.
அந்த நீதிமன்ற ஆவணத்தின் அசல் நகலை நாம் இன்னும் கண்டுபிடிக்க வேண்டும்.
அது கிடைத்தால்கட்டாடியார் மரபு → குடும்பம் → பூசை உரிமை → நீதிமன்ற அங்கீகாரம் என்ற முழுமையான வரலாற்றுத் தடத்தை உருவாக்க முடியும்.
“மழைக் காவியம்” — வரலாற்று ஆவணமா அல்லது சடங்கு இலக்கியமா?மழைக் காவியம் செட்டிபாளையத்தின் பண்பாட்டு வரலாற்றில் முக்கியமானது.
அதில் கட்டாடியார் மழை வேண்டி அம்மனை வேண்டுவது பற்றிய பாடல் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஒரு முக்கியமான வரலாற்றியல் கருத்தை முன்வைக்கலாம்.“இவர் இங்கே பூசை செய்தார்”என்று கூறினால் அது மட்டும் வரலாற்றுச் சான்றாகாது.
செய்யுள் + ஆலய மரபு + குடும்ப நினைவு + நீதிமன்ற ஆவணம்நான்கும் ஒரே நபரைச் சுட்டினால், அந்த நபரின் வரலாற்று இருப்பு மிகவும் வலுவாகிறது. இதுவே நாட்டார் இலக்கியத்தை வரலாற்று ஆய்வில் பயன்படுத்தும் சரியான முறை.
செட்டிபாளையம் மற்றும் ஊர்சுற்றுக் காவியம் மட்டக்களப்பின் கண்ணகை வழிபாட்டில் ஊர்சுற்றுக் காவியம் / உடுக்குச் சிந்து மிக முக்கியமான வாய்மொழி இலக்கிய வடிவம். மட்டக்களப்புத் தமிழகம் இதை விருத்த யாப்பில் அமைந்த பாடல் தொகுப்பு என்று குறிப்பிடுகிறது.
அதில் கண்ணகைஅம்மான் கோயில்கள் உள்ள பல ஊர்கள் தனித்தனியாகப் பாடப்படுகின்றன.காரைதீவுக்கு பல பாடல்களும், வந்தாறுமூலை, செட்டிபாளையம், களுவாஞ்சிக்குடி ஆகியவற்றுக்கு பல பாடல்களும் வழங்கப்படுவதாக அந்த நூல் குறிப்பிடுகிறது.செட்டிபாளையம் கண்ணகை மரபில் ஒரு பெயராக மட்டும் இடம்பெறவில்லை தனிப்பட்ட பாடல் இடம் பெற்ற தலமாகவும் இருந்தது.
அதே நேரம் கிடைத்த உள்ளூர் பதிப்புகளில் ஊர்சுற்றுக் காவியம் 72 பாடல்களைக் கொண்டதாக குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் கண்ணகை அம்மன் தங்கியுள்ள தலங்களை வரிசைப்படுத்தி அவற்றின் பெருமையைப் பாடும் அமைப்பு காணப்படுகிறது.
ஒரு பாடல் வரிசையில்
பட்டிநகர்
தம்பிலுவில்
காரைநகர்
வீரமுனை
கல்முனை
கல்லாறு
மகிழூர்
எருவில்
செட்டிபாளையம்
புதுக்குடியிருப்பு
மகிழடித்தீவு
முதலைக்குடா
கொக்கட்டிச்சோலை
வந்தாறுமூலை...
எனப் பல ஊர்கள் தொடர்ச்சியாக வருகின்றன.இது ஒரு சாதாரண இடப்பெயர் பட்டியல் அல்ல.கண்ணகை வழிபாட்டின் புவியியல் வரைபடம் ஒரு செய்யுளாக உருவாக்கப்பட்டுள்ளது.
செட்டிபாளையம் கண்ணகை ஆலயத்தைப் புரிந்துகொள்ள இன்னொரு முக்கியமான விஷயம் இது தற்போது
கிரான்குளம்
குருக்கள்மடம்
செட்டிபாளையம்
மாங்காடு
தேற்றாத்தீவு
களுதாவளை
ஆகிய ஆறு கிராமங்களின் பிரதிநிதிகள் ஆலய நிர்வாகத்தில் பங்கேற்கும் ஒரு தேசத்துக்கோயில்.“செட்டிபாளையம் மக்களின் ஆலயம்”என்ற அளவைத் தாண்டி,பல கிராமங்களை இணைக்கும் சடங்கு நிறுவனம்”என்ற நிலையைப் பெற்றிருக்கிறது.
தேற்றாத்தீவு — தனித்துவமான பங்கு
செட்டிபாளையம் கண்ணகை ஆலயத்தில் தேற்றாத்தீவு மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.கிடைத்த பதிவுகளின்படி, தேற்றாத்தீவு கட்டாடியார் மரபினர் செட்டிபாளையம் கண்ணகை அம்மனுக்குப் பூசை செய்வதுடன் , தேற்றாத்தீவு மக்கள் திருக்கல்யாணச் சடங்கில் முக்கிய பங்காற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகை ஆலயத்திலும் தனித்த பெருவிழா வளர்ந்ததாக அந்தப் பதிவு விளக்குகிறது.
இதன் மூலம் ஒரு சடங்கு மரபு மைய ஆலயம் → சடங்கு உரிமை → கிளை ஆலயம் → தனிப்பட்ட கிராம விழா என்ற பரிணாமத்தை அடைந்திருக்கலாம்.
களுதாவளை — “கும்பத்து நெல்” மரபு செட்டிபாளையம் ஆலயத்துடன் களுதாவளைக்கும் ஒரு தனித்துவமான தொடர்பு உள்ளது.உள்ளூர் வரலாற்றுப் பதிவு, செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் பூரண கும்பச் சடங்கிற்கான நெல்லை களுதாவளை மக்கள் வழங்கும் பாரம்பரியம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
இது மிகவும் சுவாரசியமான சமூக வரலாற்றுத் தடயம்.ஏனெனில் ஒரு ஆலயச் சடங்கு வெறும் பூசையால் நடத்தப்படவில்லை. இதனை முதலில் அம்பிளாந்துறை, பழுகாமம் மக்கள்வழங்கி வந்ததாக கர்ணபரம்பரை கதைக சொல்கிறது.
செட்டிபாளையம் கண்ணகை ஆலயத்தில் ஒவ்வொரு ஊருக்கும் குறிப்பிட்ட சடங்கு பங்கு வழங்கப்பட்டுள்ளது .
கிரான்குளம் — கதவு திறத்தல்
குருக்கள்மடம் — பகற்சடங்கு
மாங்காடு — இரவுச்சடங்கு
தேற்றாத்தீவு — கலியாணச் சடங்கு
செட்டிபாளையம் — பூரண கும்பச் சடங்கு
களுதாவளை — பகற்சடங்கு மற்றும் திருக்குளிர்த்தி
எனப் பொறுப்புகள் பகிரப்பட்டுள்ளது
கண்ணகைச் சடங்கின் காலம்
கிழக்கிலங்கையில் கண்ணகை அம்மன் திருச்சடங்கு பொதுவாக வைகாசி மாதத்துடன் தொடர்புடையது.
“வைகாசித் திங்கள் வருவேனென்று...”
என்ற மரபுச் செய்தி காணப்படுவதாகப் பதிவுகள் கூறுகின்றன.
இது கண்ணகை வழிபாட்டின் காலச்சுழற்சியைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும்
கதவு திறத்தல்
கும்பச் சடங்கு
கலியாணக்கால்
காவியம்
உடுக்கு
குரவை
கொம்புமுறி
குளிர்த்தி
போன்ற பல அடுக்குகள் ஒன்றோடு ஒன்று இணைகின்றன.
செட்டிபாளையம் — செய்யுளில் உயிரோடு இருக்கும் ஊர்
ஒரு ஊரின் பெயர் பழைய செய்யுளில் தொடர்ந்து வருவது அதன் பண்பாட்டு நினைவகத்திற்கு மிக முக்கியமானது.
செட்டிபாளையம் ஊர்சுற்றுக் காவியத்தில் உள்ளது..கண்ணகை அம்மன் காவியத்தில் உள்ளது. அகவலில் உள்ளது.குளிர்த்திப் பாடலில் உள்ளது.மழைக் காவியத்தில் உள்ளது.வசந்தன் பாடல்களில் உள்ளது.
1994 ஆலயத் தொகுப்பின் உள்ளடக்கப் பட்டியலே இவ்வளவு இலக்கிய வடிவங்களைச் சுட்டுகிறது.இதனால் செட்டிபாளையத்தின் வரலாறு எழுதப்பட்ட வரலாறு மட்டுமல்ல; பாடப்பட்ட வரலாறும் ஆகும்.
#வசந்தன் கவியும் செட்டிபாளையமும்
இங்கு கிடைத்த மற்றொரு முக்கியமான ஆதாரம்“வசந்தன் கவித்திரட்டு”
அதன் ஆங்கில முன்னுரைக் குறிப்பில், செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள கண்ணகைத் தெய்வத்தைப் போற்றிப் பாடப்படும் ஒரு Swing Vasanthan பாடல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கண்ணகி ஊஞ்சலில் அமர்த்தப்பட்டு பாடல் பாடப்படுவதாக விளக்கப்பட்டுள்ளது.
இது செட்டிபாளையத்தின் கண்ணகை மரபு.
மட்டக்களப்புத்_தமிழகம் செட்டிபாளையத்தின் மைய அமைப்பையும் பதிவு செய்கிறது.கடலையும் வாவியையும் இணைக்கும் நேரான பாதை ஒன்று ஊரின் நடுப்பகுதியைச் சென்றதாகவும், அந்தப் பாதை கண்ணகை ஆலயத்துடன் தொடர்புடையதாக ஒரு கர்ணபரம்பரைக் கதை இருப்பதாகவும் கூறுகிறது.
இது வரலாற்று உண்மையாக நிரூபிக்கப்படாத மரபு என்றாலும், ஒரு முக்கியமான சமூகப் பொருளை வெளிப்படுத்துகிறது அதாவது கண்ணகை ஆலயம் வெறும் மத இடமாக இல்லாமல் ஊரின் இடவியல் அமைப்பிலும் ஒரு மையப் புள்ளியாக இருந்திருக்கலாம்.
அடிக்கல் நாட்டிய கட்டாடியார் — மரபும் நம்பிக்கையும் அதே உள்ளூர் நூல் ஒரு சுவாரசியமான ஐதிகத்தையும் பதிவு செய்கிறது.கடலில் வெடி ஒலி கேட்கும் நேரத்தில் கட்டாடியார் ஆலய அடிக்கல் நாட்ட வேண்டும் என்று அம்மன் கட்டளையிட்டதாக மரபு கூறுகிறது.
இதை வரலாற்றுச் சம்பவமாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
செட்டிபாளையமும் கண்டி அரசும்
மட்டக்களப்பு மான்மியம் கண்டி அரசுக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான அரசியல் தொடர்புகளை விரிவாகச் சொல்கிறது.
அதில் மட்டக்களப்பு கண்டி நகரத்துடன் தொடர்புடையதாகவும், பின்னர் ஒல்லாந்தர் ஆட்சிச் சூழலில் மட்டக்களப்பு நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அறுமக்குட்டிப்போடி மற்றும் கந்தப்போடி ஆகியோர் நிலைமைப் போடி அதிகாரிகளாகப் பிரிக்கப்பட்டதாகவும், அவர்களுடைய அதிகாரப் பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன.
அதே பகுதியில் அறுமக்குட்டிப்போடி காலிங்கக் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் தேவாலயங்களைச் செழிப்புற நடத்தியவர் என்றும், செட்டிபாளையத்தில் கண்ணகை அம்மனை நிறுவியவர் என்றும் மான்மியம் கூறுகிறது.
இந்த “அறுமக்குட்டிப்போடி செட்டிபாளையம் கண்ணகை அம்மனை நிறுவினார்” என்பதற்கான வரலாற்று ஆதாரம் இல்லை எனினும்அறுமக்குட்டிபோடி அம்பிளாந்துறையை சேர்ந்தவர் என்பதும் அவர் கண்டி மன்னனின் பிரதிநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
படையாட்சி – கலிங்கக் குடி – செட்டிபாளையம் மட்டக்களப்பு மான்மியத்தின் அரசியல் வர்ணனைகளில்:
படையாட்சி குலம்
கலிங்கக் குலம்
வங்கக் குலம்
சிங்கக் குலம்
போன்ற பெயர்கள் வருகின்றன.
கண்ணகை விக்கிரகங்களை நிறுவிய கதைப்பகுதியிலும் படையாட்சி குலத்துத் திக்கதிபர் மற்றும் கலிங்கக் குலத்தவர் தொடர்புடையதாக வருகின்றனர்.
இதனால் செட்டிபாளையம் கண்ணகை வரலாற்றை ஆய்வு செய்யும்போது கண்ணகை வழிபாடு மட்டும் என்று அணுகுவது போதாது.குடி அமைப்பு + அரசியல் அதிகாரம் + பூசை உரிமை + ஆலய ஊழியம் என்பவற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
ஏழு விக்கிரகக் கதை மற்றும் ஏழு ஊர் உரிமை — ஒரே மரபா?
இது எனது ஆய்வில் இன்னும் தீர்க்கப்படாத முக்கியமான கேள்வி.ஒருபுறம் மட்டக்களப்பு மான்மியம்ஏழு கண்ணகை விக்கிரகங்கள்
ஏழு நாடார் குடும்பங்கள்ஏழு கோவியர் குடும்பங்கள்ஏழு கிராமங்கள் என்று கூறுகிறது.
மறுபுறம் செட்டிபாளையம் ஆலய மரபு
ஏழு ஊர்களின் உரிமை என்று கூறுகிறது.
இவை இரண்டும் ஒரே வரலாற்றுச் சம்பவத்தின் இரண்டு நினைவுருவங்களா?
அல்லது இரண்டு வேறு காலங்களின் சமூக அமைப்புகளா?இதை இன்னும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.ஆனால் இவை இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்வது மிகவும் முக்கியம்.1897 ஆவணம் இந்தக் கேள்விக்கு புதிய வெளிச்சம் தருகிறது
1897 நிர்வாகப் பதிவு
அம்பிளாந்துறை
பழுகாமம்
செட்டிபாளையம்
ஆகிய இடங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒரே ஆலய நிர்வாகச் சூழலில் இருந்ததை காட்டுகிறது.
இதன் மூலம் குறைந்தபட்சம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் செட்டிபாளையம் கண்ணகை ஆலயம் பல கிராமங்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட நிறுவனம் என்பது வலுவாகத் தெரிகிறது.இதுவே நமது ஆய்வின் மிக வலுவான வரலாற்றுத் தடயங்களில் ஒன்று.
பின்னர் என்ன நடந்தது?காலப்போக்கில் அம்பிளாந்துறை மற்றும் பழுகாமம் தாமாகவே நிர்வாகப் பங்கில் இருந்து விலகியதாகபின்னைய ஆலய வரலாற்றுப் பதிவு குறிப்பிடுகிறது.இதனால் இன்று காணப்படும் ஆறு கிராம நிர்வாக அமைப்பு, பழைய ஏழு ஊர் அமைப்பின் அப்படியே தொடர்ச்சி அல்ல. அது பழைய ஏழு ஊர் அமைப்பு.
செட்டிபாளையம் — ஒரு சடங்கு கூட்டமைப்பு
இப்போது வரை கிடைத்த ஆதாரங்களை ஒன்றாகப் பார்த்தால் செட்டிபாளையம் கண்ணகை ஆலயத் “ஒரு கிராமத்தின் ஆலயம்”என்று மட்டும் அழைப்பது அதன் வரலாற்றுப் பரப்பைச் சுருக்கிவிடும்.இது
கிரான்குளம்
குருக்கள்மடம்
மாங்காடு
தேற்றாத்தீவு
செட்டிபாளையம்
களுதாவளை
ஆகிய ஊர்களை இணைக்கும் ஒரு சடங்கு வலையமைப்பு.
பழைய காலத்தில்
அம்பிளாந்துறை
பழுகாமம்
ஆகியவையும் நிர்வாகப் பங்கைக் கொண்டிருந்தன என்பதற்கான 1897 தடயம் உள்ளது.
இதனால் இது ஒரு பிராந்திய பண்பாட்டு நிறுவனம் எனக் கருதக்கூடிய அளவுக்கு ஆதாரங்கள் சேர்கின்றன.நோய், மழை, வளம் — கண்ணகை வழிபாட்டின் சமூகப் பங்கு கண்ணகை அம்மன் வழிபாட்டில் நோய் தீர்ப்பு, மழை வேண்டுதல், வளம் வேண்டுதல் ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன.
மட்டக்களப்புத் தமிழகத்தில் கண்ணகை வழிபாட்டுடன்:
வெப்புநோய்
மழை
விவசாயம்
வளம்
குடும்ப நலம்
போன்ற சமூகத் தேவைகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
செட்டிபாளையத்தின் மழைக் காவிய மரபும் இதனுடன் இணைகிறது.அதனால் கண்ணகை ஆலயம் ஒரு சமய நிறுவனமாக மட்டும் இல்லாமல், பழைய கிராமிய சமூகத்தில் இயற்கை, நோய், மழை, விவசாயம் ஆகியவற்றை அர்த்தப்படுத்தும் பண்பாட்டு நிறுவனமாக இருந்திருக்கலாம்.
சடங்கு காலத்தின் சமூக ஒழுக்கம்
செட்டிபாளையம் கண்ணகை சடங்கு காலத்தில்மஞ்சள் தட்டாமை,மாவிடிக்காமை
புலால் தவிர்த்தல் போன்ற பாரம்பரியக் கட்டுப்பாடுகள் இருந்ததாக உள்ளூர் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இவற்றை நவீன பார்வையில் வெறும் “மதத் தடை” என்று பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முழு சமூகத்தையும் ஒரே ஒழுக்க நெறிக்குள் கொண்டு வரும் சடங்கு அமைப்பு என்று கூறலாம்.
செட்டிபாளையம்.
அதன் வரலாறு ஒரு கோயிலில் மட்டும் இல்லை.ஓலையில் இருக்கிறது.பாடலில் இருக்கிறது.கட்டாடியார் மரபில் இருக்கிறது.1897ஆம் ஆண்டின் நிர்வாக நினைவில் இருக்கிறது.அம்பிளாந்துறை வன்னிமைகளின் தலைமையில் இருக்கிறத கிரான்குளம் முதல் களுதாவளை வரை கிராமங்களின் சடங்கு உரிமையில் இருக்கிறது.அம்பிளாந்துறை, பழுகாமம் போன்ற ஊர்களின் பழைய பங்கேற்பிலும் இருக்கிறது.
உசாவியவை :
F.X.C. நடராசா, மட்டக்களப்பு மான்மியம் — செட்டிபாளையம் கணபதிப்பிள்ளைப் புலவரின் முழுமையான ஓலைப்பிரதி உட்பட ஓலை ஆதாரங்களை ஒப்புநோக்கிய பதிப்பு.
.V.C. கந்தையா, மட்டக்களப்புத் தமிழகம் — செட்டிபாளையத்தின் நிலவியல், இடப்பெயர், புலவர் மரபு, கண்ணகை வழிபாடு மற்றும் ஊர்சுற்றுக் காவியம் தொடர்பான முக்கிய ஆதாரம்.
செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு, 1994 — 226 பக்கத் தொகுப்பு; சடங்கு, கட்டாடியார், கண்ணகை காவியம், அகவல், மழைக் காவியம், பல ஊர் தொடர்புகள் ஆகியவை அடங்கிய முக்கிய உள்ளூர் ஆதாரம்.
1897 ஆலய நிர்வாகக் கூட்டப் பதிவு தொடர்பான வெளியிடப்பட்ட செய்தி — அம்பிளாந்துறை, பழுகாமம் ஆகியவற்றின் நிர்வாகப் பங்கேற்பு குறித்து முக்கிய தடயம்.
கண்ணகை ஊர்சுற்றுக் காவியம் / உடுக்குச் சிந்து — செட்டிபாளையம் உட்பட மட்டக்களப்பின் கண்ணகைத் தலங்களின் இலக்கியப் புவியியல்.
வசந்தன் கவித்திரட்டு — செட்டிபாளையம் கண்ணகைத் தெய்வத்துடன் தொடர்புடைய ஊஞ்சல் வசந்தன் பாடல் குறிப்பு.
திரு. #குணசேகரம் - மாங்காடு ( உதவிக்கல்விப்பணிப்பாளரிடமிருந்து பெற்றவாய்மொழி தகவல்கள்) கட்டுரையை செம்மை பார்த்து திருத்தி வழங்கியவரும் அவரே. நன்றி Sir.
பக்கத்தை தொடர #Follow செய்திடுங்கள்
குணரெத்தினம் - உமாறமணன்
இதன் தொடர்ச்சியை எதிர்பாருங்கள்
